அதிகாலை வெண்ணிலவில் கனவுகள் நனைந்து,
சூரிய கதிர்களின் உற்சாகத்தில்,
வீரன் ஒருவன் களத்திற்கு புறப்பட்டான்.
இடுப்பின் கால்சட்டையை அரைஞாண் கயிற்றால் இறுக்கி,
பொத்தனில்லாத சட்டையை பெருமையுடன் அணிந்து, டயர் வண்டி எடுத்து புறப்பட்ட வீரனின் ஆட்டம் பம்பரத்தின் வேகத்தில் சுழன்று,
பலிங்கியின் ஓசையில் கலந்து,
கில்லி ஆட்டத்தில் உறைந்தது.
ஆர்ப்பரிக்கும் வெயிலில் நா வறண்டு, பசியில் கிறங்கி
ஐஸ் வண்டியின் ஓசையில்
காலி பாட்டில்களை கொடுத்து தாகம் தீர்த்தான்.
அம்மாவின் ரேஷன் அரிசி சோறில்,
கருவாட்டு குழம்பை ருசி பார்த்து,
ஓய்வெடுக்க மனமின்றி மீண்டும் களம் புகுந்தான்..
ஓடும் நீரோடு போட்டியிட்டு
கண்கள் சிவக்க ஆற்றில் குளித்து , முத்து
மழையின் தூரல்கள் உடலை சிலிர்க்க
மனமின்றி வீடு சேர்ந்தான்..
மீண்டும் , நூறான் குச்சியில் நூறு அடுக்கி,
திருடன் போலீஸில் பிடிப்பட்டு,
பல்லாங்குழியில் குழி துடைத்து,
கண்ணாம்மூச்சி ஆட்டம் இரவை அழைக்க,
பௌர்ணமி நிலவில்
நிழலா நிஜமா போட்டி இரவையே பகலாக்க,
அம்மாவின் சோற்றுருண்டை சுவையில் மயங்கி
கிழவியின் கதை கேட்டு முடிக்கும் முன்னே
உறக்கத்தில் ஆழ்ந்தான் நாளை பள்ளி வேலை நாள் என்பதை மறந்து.
இன்றைய டிஜிட்டல் உலகில்,
கணினியின் மயக்கம், தொலைபேசியின் தாக்கம்,
விளையாட்டுகளின் ஸ்கிரீனில் சாய்ந்த காட்சிகள்,வெளி உலகம் காணாமல் வீட்டில் முடங்கிய இளமை பருவம்,
மாறிய உணவுகளும் பாரம்பரியமும்
நினைக்கும் தொலைவில் வாழும் உறவுகள்..
ஹ்ம்ம்... இங்கு பலர்
கனவில் மட்டுமே வாழ்கின்றனர் மேற்கூறிய வீரனின் வாழ்க்கையை.