பைத்தியக்கார மனது, காற்றுடன் காதல் கொண்டது. சக்கரங்கள், சாலை மீது மோகம் கொண்டன. மணிக்கட்டின் கருணைக்காகக் கதறிக்கொண்டிருந்தது உந்துருளி. இவற்றின் நடுவே அவன்; காலடியில் உலகம், கட்டுக்கடங்காத காற்று, கர்ஜிக்கும் இயந்திர சத்தத்தின் இடையே ஓர் ஆழ்ந்த அமைதி, அதுவே மெல்லிசை, கிழட்டுக் குதிரையில் ஓய்வின்றி பயணப்பட்டான் !

இடைவிடாது 200 கிலோமீட்டர் கடந்துவிட்டதை உணர்ந்த மோகன், வண்டியை நிறுத்த எண்ணினான். நிறுத்துவதற்கான தேவை எதுவுமில்லை என்றாலும் ‘ஒரு காபி குடிக்கலாம்’ என்று முணுமுணுத்துக்கொண்டு, சுங்கச் சாவடியைக் கடந்து, தேநீர்க் கடையுடன் அமைந்த ஒரு சிறிய உணவகத்தின் முன் நிறுத்தினான்.

அங்கே வரிசை இன்றி சில நீண்ட இருக்கைகள் இருந்தன, அருகில் ஒரு உடைந்த பெயர்ப் பலகை இருந்தது. அதில் வெள்ளை தாடியுடன் ஒரு முதியவரின் படம் தீட்டப்பட்டு இருந்தது. மிகவும் பரிட்சியமான முகம் போலத் தோன்றியது, ஆனால் சட்டென அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கடையின் பெயரைக் கவனித்தான் ‘மோட்டல் மூடி’ என்று எழுதியிருந்தது. அதைக் கண்ட பின்புதான் யாரெனப் புரிந்தது. சிறு புன்னகையுடன் ‘பாவம் மோடி’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான். ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறந்தது என்று அவர் புளகாங்கிதம் அடையும்போதும் மக்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்குமோ அந்த அளவுக்கு அந்த ஓவியம் பரிதாபமாக இருந்தது.

கடையின் உள்ளே ஒரு புதிய பெயர்ப் பலகை தயாராகிக் கொண்டிருந்ததைக் கவனித்தான். ‘ஓட்டல் அடேங்கப்பா’ என்று எழுதியிருந்தது. கடையின் பெயருக்கு இணையாக ஒரு வாசகம் எழுதியிருந்தது, ‘இங்கு அரசியல் பேசக்கூடாது’, என்று.

வண்டியின் இயந்திரம் இன்னும் இயங்கிக் கொண்டிருந்தது. நீண்ட நேரப் பயணத்திற்குப் பிறகு வாகனத்தை நிறுத்திய உடனே இயந்திரத்தை அணைக்காமல் இருப்பது நல்லது என்பது அவன் நம்பிக்கை. உண்மையா என்பது தெரியாது. ஆனால் குழந்தைப்பருவத்திலிருந்து தன் அப்பா அப்படிச் செய்வதை பார்த்திருந்ததால், அவனும் அப்படிச் செய்வான்.

தன் அப்பாவிடமிருந்து பெற்ற விலைமதிப்பில்லா பரிசாகிய ஜாவா, ஒரு சொட்டு கண்ணீர் அவன் விழி தவறி வண்டியின்மீது விழுந்தது, சட்டெனக் கையுறையால் துடைத்தான்.

அந்த ஜாவா’வை தன் பதினைந்தாம் வயதில், தன் அப்பா இல்லாத நேரத்தில் ஓட்ட முயன்று, பின் அது அவருக்குத் தெரிந்த போது, முரட்டு அடி வாங்கியதை நினைவு கூர்ந்தான்.

“என் வண்டியை ஓட்டுற அளவுக்கு நீ இன்னும் வளரல”. ஓராயிரம் முறை கேட்டுப் பழக்கப்பட்ட அதே வார்த்தை.

அப்பா லெட்சுமணன், கிராமத்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கிராமத்தின் மதிப்பிற்குரிய மனிதர்களில் ஒருவர். புராணக்கதைகளில் ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டி ரகசிய கோட்டையில் ஒரு அரக்கனின் உயிர் இருக்கும் கதையை நாம் கேட்டிருப்போம். அப்பாவின் உயிர் அந்த ஜாவாவில் தான் இருந்தது, வருடக்கணக்கில் சிறுகசிறுக சேமித்து வாங்கிய வண்டி.

அந்த கிராமத்தின் சாலைகளை வென்றெடுத்த முதல் இருசக்கர வாகனம் அது. வண்டியின் சத்தத்தை வைத்தே, “வாத்தியார் வண்டி வருது” என்பார்கள் ஊர்மக்கள்.

ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும்; வண்டியை அக்கக்காகப் பிரித்துப் போட்டுப் பழுதுபார்ப்பார். வண்டியின் சத்தத்திற்கு மிகவும் மெனக்கெடுவார்.

மோகன் அப்பாவின்மீது மிகவும் மரியாதையை வைத்திருந்தான், அவர் வண்டியின்மீதும். சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும் போதியிலிருந்தே, ஒவ்வொரு முறையும் அவனுக்குச் சாப்பாடு ஊட்டும் போது, அம்மா அதில் அமர வைத்துத் தான் ஊட்டுவார். இல்லையென்றால் ஒரு வாய் கூட உள்ளே இறங்காது. அதற்காகவே மோகன் பள்ளிக்கூடம் போகும் வயது வரை அப்பா மிதிவண்டியில் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

மோகன் என்ஜினை அணைத்துவிட்டு, ’L’ என்று பொறிக்கப்பட்டு, பாதி துருப்பிடித்த சாவிக்கொத்துடன் இருந்த சாவியை எடுத்தான். இரண்டு வயதிலிருந்து ஆசைப்பட்ட அப்பாவின் செல்லக்குட்டி, முப்பத்தாறு வயதில் இனி அவனுடையது.

“அண்ணே, பலகாரம் எடுத்துக்குறேன்” என்று இரண்டு பருப்பு வடைகளை எடுத்துக் கொண்டான். ஒரு மடக்கு காபி ஒரு கடி, என மாறி மாறி உட்கொண்டபடி, நினைவு பாதையில் ஒரு பயணம் சென்றான்.

நீண்ட நேர யோசனைக்குப் பின், தயங்கித் தயங்கி அப்பாவின் அறைக்குள் சென்று ஒரு துணிப்பை நிறையப் பணத்தை நீட்டினான். ஐந்நூறு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் நோட்டு வரை, ஒவ்வொன்றும் தனித்தனி கட்டுகளாகவும், சில்லறைக் காசுகள் 8 டப்பாக்களிலும் இருந்தது.

“எனக்கு உங்க வண்டி வேணும்; எனக்கு குடுக்குறீங்களா. கைச்செலவுக்கு நீங்க குடுக்குற காச சின்னவயசுல இருந்து நான் சேமிச்சு வெச்சுருக்கேன்”, என்று அப்பா நிமிர்ந்து பார்ப்பதற்குள் வேகமாகச் சொல்லி முடித்தான்.

லெட்சுமணன் தன் மகனின் பதட்டமான முகத்தைப் பார்க்க மெதுவாகத் திரும்பி, “எவ்வளவு இருக்கு இதுல ?” என்று கேட்டார்

அவர் கேட்டு முடிப்பதற்குள், மெல்லிய குரலில் பதில் வந்தது “இதுவரை 18,902 ரூபாய்” என்று.

“என் வண்டி அவ்ளோ மலிவுனு நெனைக்கிறியா” என்று அப்பா கேட்டார்.

“எனக்கு வேலை கெடச்சதும் மீதி பணத்தை கொடுத்துடுறேன் ” என்றான் மோகன்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு “சனிக்கிழமை பேசலாம்” என்றார். சனிக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தது. அப்பா என்ன செய்யப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே இருந்தான் தூக்கமில்லாமல்.

சனிக்கிழமை மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய போது, வழக்கமாக ஜாவா நிற்கும் இடத்தில் அதற்குப் பக்கத்தில், புத்தம் புதிய ராயல் என்பீல்ட் ஒன்று நின்று கொண்டிருந்தது. “நீ எடுத்த முயற்சிக்கு இந்த வண்டி என்னோட பரிசு ; இருந்தாலும் என் வண்டிய ஓட்டுற அளவுக்கு நீ இன்னும் வளரல” என்று எப்போதும் சொல்கிற வார்த்தையையே சொன்னார். “இந்த வார்த்தையை நீ ஓராயிரம் முறை கேட்டுருப்ப. காரணத்தை இதுவரை நான் சொன்னதில்லை. இந்த வண்டி என் சுயமரியாதை, என்னோட அடையாளம். மரியாதைனு நான் சொல்றது ஒரு சராசரி கெழவனோட பெருமபீத்திக்கிறது இல்ல.”

“எனக்கு விவரம்தெரிஞ்ச வயசுல, உங்க தாத்தா பாட்டி ரெண்டு பெரும் தோட்டி வேலைக்கு போவாங்க. கூட இருக்க சினேகிதர்கள் யாரும் வீட்டுக்குள்ள கூட வரமாட்டாங்க. பள்ளிக்கூடத்துல தனியா தரைல ஒக்காரனும். பஸ்ஸுல ஊர்காரங்க யாரும் இருந்தா ஒக்காரக்கூடாது, எழுதப்படாத விதி. நம்மள அடையாளப்படுத்துற வார்த்தைகளே அருவெறுப்பா இருக்கும்.

என்னோட அடையாளத்தை மாத்தினது ஒன்னு என்னோட படிப்பு இன்னொன்னு என்னோட வண்டி. தரைல ஒக்காந்து படிக்க சொன்ன எடத்துல ஒருநாள் ஹெட்மாஸ்டர் ஆனேன், எல்லாரையும் சமமா ஒக்காரவெச்சேன். இதே ரோட்ல, இந்த வண்டி வந்த அப்புறம் ஒக்காந்துக்குட்டு போறதுக்கு எவனோட அனுமதியும் எனக்கு தேவைப்படல. அதனால்தான் இந்த ஜாவா ஸ்பெஷல்.

என்னைக்காச்சும் ஒருநாள் நான் பெருமைப்படற மாதிரி நீ எதாவது செய்வனு நம்பிக்கை இருக்கு, அன்னைக்கு இந்த வண்டிய உனக்கு தரேன்.”

அப்பா சொன்ன தருணம் இன்று, அப்பாவின் ஜாவா இன்று அவனுடையது. அப்பாவே வந்து, “இந்தா இது இனிமே உன்னோடது, எங்கயாது தூரமா வேற ஊருக்கு போய்ட்டு வா, மனசு அமைதியாகும், அடுத்து என்ன செய்யலாம்னு யோசன வரும்’, என்று சொன்னார்.

மோகனுடைய பல வெற்றிகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அப்பா; அவன் ஒரு அடிவாங்கித் தோற்றுப்போய் அடுத்து வாழ்க்கையில் என்னவென்று புரியாத இந்த தருணத்தில் அவர் வண்டியை அவன் கையில் தந்தார், பயணப்படு வழிபிறக்கும் என்று.

காற்றைக் கிழித்துக்கொண்டு சாலையில் சென்றது ஒரு ஹார்லி; சுயநினைவிற்கு வந்துதான். காலியான லோட்டாவை உறிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.