தாத்தாவைக் கேட்டேன்,

குரங்கன் எப்படி

மனிதன் ஆனான்?

ஏதோ, போதைக் காளானை உண்டு,

தன்னறிவு பெற்று,

மனிதன் ஆயிற்று,

தாத்தாவின் பதில் !

 

காலப் பயணம் சென்று,

கல்லொன்று கொண்டு,

அம்மந்தியை விரட்டி, 

மனிதனில்லா உலகம் செய்ய,

வரமொன்று வேண்டுமென்றேன்.

ஏனிந்த கொலைவெறியென்றார்.

பட்டியலிட்டேன் !

 

சூரியன் தாழ்ந்து நிற்க,

நம்பிக்கை மங்கிப் போக,

போரின் நிழல் ஒளியில் ,

பெருக்கெடுத்து ஓடும் 

கண்ணீருக்கு, ஏனோ 

நெருப்பை அணைக்கும் 

வல்லமை இல்லை.

 

ஹிட்லரின் கொடுமையை 

ருசி பார்த்த யூத நாக்கு,

எப்படி இன்று   

பிஞ்சுக் குழந்தைகள் 

உதிரத்தை  ருசி பார்க்கிறது?

 

மதங்கள் அனைத்தும் 

அமைதியைப் போதிக்க,

அமைதியைக் கெடுக்கிறது 

மதத்தின் மீதான போதை.

 

தன் தர்மத்தில் 

பெருமை கொள்ளும் நாடொன்று,

மசூதிகளில் கைவைக்கிறது,

கர்ப்பிணியின் 

யோனியிலும் கைவைக்கிறது,

குடிக்கும் நீரில்

மலத்தைக் கலக்கின்றது.

 

அங்கே பௌத்த தேசம் ஒன்று, 

முரண்பாட்டில் மூழ்கியது.

இங்கே மனிதமே இல்லை,

நீ எதிலடா

கடவுளைத் தேடுகிறாய் ?

 

மனிதனாய் உருவாக்கிய

கோடுகளும் அதற்கான

பிராந்திய சண்டைகளும்,

சிறகடித்துப் பறக்கின்ற

பறவையொன்று நம்

தலையில் எச்சமிட்டுப் 

பறக்கிறது கடல் தாண்டி,

கடவுச்சீட்டின்றி.

 

புதின், வெள்ளை மாளிகை, 

இந்தியா, சீனா,

யார் கையில் வல்லரசு?

வைரசுகளும்,  

பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும்

சத்தமின்றி சிரிக்கின்றன.

 

அந்த காளானைக் கடுவன், 

பாதி தான் சாப்பிட்டது போல,

கற்கும் அறிவை பெற்ற மனிதன்,

கோவிட், சுனாமி, பூகம்பத்திலிருந்து,

பாடம் கற்க மறுக்கிறான்.

 

போதுமடா போதும் 

நீ பிடுங்கிய ஆணியெல்லாம்,

ஏய்  குரங்கே ! 

சேட்டைக்கார குரங்கே !

இதோ வருகிறேன் கல்லோடு, 

வரம் மட்டும் கிடைக்கட்டும் !